கோவில்பாளையத்தில் சோழர் காலத்திய பழைமையான கல்வெட்டு!!

Keep sharing
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கோவில்பாளையத்தில் உள்ள காலிங்கராயன் குளத்தில் சோழர் காலத்திய பழைமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே, கெளசிகா நதிக் கரையின் தென்பகுதியில் உள்ள காலிங்கராயன் குளத்தில் புனரமைப்பு களப்பணியை கடந்த 5 வாரங்களாக கோவில்பாளையம் நீர்நிலைப் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது களப்பணியின்போது ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில் நான்கு வரிகளைக் கொண்ட பழைமையான வட்டெழுத்துப் பொறிப்புகள் உள்ளன.
இந்தக் கல்வெட்டை கோவையைச் சேர்ந்த குமரவேல் ராமசாமி, சுதாகர் நல்லியப்பன் இருவரும் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் உடவியுடன் ஆய்வு செய்து, படியெடுத்துப் படித்தனர். மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராசகோபால் சுப்பையா, முன்னாள் தொல்லியல் துறை இணை இயக்குநர் பூங்குன்றன் ஆகியோரிடம் அதனை உறுதிப்படுத்தினர்.                                                                                                                                                                                                                                                                      இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது:                                                                                          
பத்தாம் நூற்றாண்டில் சோழ அரசின் கட்டுப்பாட்டில் கோநாட்டுத் தலைவரான வீரசோழன் வசம் கொங்கு பகுதி வந்துள்ளது. இந்த வீரசோழன் கொங்கு சோழர் என அறிஞர்களால் அழைக்கப்பட்ட அரச மரபின் தோற்றுவாய் ஆவார். அவருக்குப் பின் அவரது மகன் கோக்கலிமூர்க்கன் என்பவர் 24 ஆண்டுகள் கொங்கின் வடபகுதியை ஆட்சி புரிந்துள்ளார். காலிங்கராயன் குளத்தில் கிடைத்த கல்வெட்டு கோகலிமூர்க்கனின் மகனான ஸ்ரீ விக்கிரம சோழனின் பெயரைத் தாங்கியுள்ளது. இந்தப் பகுதியிலுள்ள பழமையான கற்றளி (கற்கோயில்) ஏதேனும் ஒன்றில் இந்தக் கல்வெட்டு இருந்திருக்க வேண்டும். இதன் உடைந்த பகுதிகள் கிடைத்தால் அதனை உறுதிப்படுத்த முடியும் என்றனர்.  இன்றைய கோவில்பாளையம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கவையன்புத்தூர் என்று உள்ளது என்றனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குநர் பூங்குன்றன் கூறியதாவது:
வண்ணாற்றங்கரை என்னும் பழைமையான பெயரைக் கொண்ட இன்றைய கெளசிகா நதிக் கரையில் அமைந்துள்ள கோவில்பாளையத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட புதிய கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்களான சாம்பல் மேடுகள் உள்ளன. மேலும் இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் கர்நாடகத்திலிருந்து ராஜகேசரிப் பெருவழிப் பாதையில் உள்ள ஊர். இங்கு கிடைத்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு முக்கியமான வரலாற்று சாசனம் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி..


Keep sharing
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *